மணல் குவாரி அதிபர்களின் வீடு, அலுவலங்களில், அமலாக்கத்துறை சோதனையில் ரூ.15 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மணல் குவாரி அதிபர்கள் ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகிய 3 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மணல் கடத்தல், மணல் குவாரிகளில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படையில் கடந்த நான்கு நாட்களாகத் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன் மற்றும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் உள்ளிட்டோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், மணல் குவாரி அதிபர்கள் தொடர்புடைய சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30 -க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. குறிப்பாக, கனிமவளத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும், அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ. 15 கோடி பணத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், ஒரு கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, அமலாக்கத்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது முதலே, மணல் குவாரி அதிபர்கள் ரத்தினம், கரிகாலன், ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேரும் தலைமறைவானார்கள்.
இந்த நிலையில், அமலாக்கத்துறையினர் சோதனை முடிந்த நிலையிலும், அவர்கள் 3 பேரும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.
மணல் குவாரி அதிபர்கள், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர் என்றும், இவர்களுக்கு இடையே வரவு – செலவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையொட்டியே, இந்த சோதனை நடைபெற்றுள்ளது.