நாட்டில், சாமானியர்களைத் தொழில் அதிபர்கள் ஆக்குவதே, விஸ்வகர்மா திட்டத்தின் முக்கிய நோக்கம் என, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் 17-ம் தேதி தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்குப் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சேவைப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு மண்டல் அளவிலும் ரத்ததான முகாம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் மற்றும் தூய்மை பணிகள் ஆகியவற்றைத் தமிழக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
மேலும், மத்திய அரசின் இலவச காப்பீடு திட்டங்கள் மற்றும் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்துள்ள நலத்திட்ட விவரங்கள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றைத் துண்டறிக்கையாக வீடுவீடாக வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தலைநகர் சென்னையில் தி.நகரில், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73 -வது பிறந்த நாளை முன்னிட்டு, நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பாக, ஆயுஷ் ஹோமம் மற்றும் கோ பூஜை மற்றும் 73 கோ தானம் நிகழ்ச்சி உள்ளிட்டவை டிரஸ்ட் நிறுவனரும், பாஜக நிர்வாகியுமான வினோஜ் பி செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, மத்திய அமைச்சர் வி.கே.சிங், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், மற்றும் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பாரத பிரதமர் நலமோடு வாழ வேண்டும் என்று ஆயுஷ் ஹோமம் மற்றும் கோ தானம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் விஸ்வகர்மா திட்டத்தை, பாரத பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டம் குலத்தொழிலை ஈடுபட வைக்கிறது என்று தமிழகத்தில் தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதேபோல, குலத்தொழிலை ஈடுபடவைக்கும் இந்த திட்டத்தை எதிர்ப்பதாகவும் ஒரு சில அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம், எந்த வகையிலும் குலத் தொழிலை ஈடுபட வைக்கும் திட்டம் அல்ல. அழிந்து வரும் தொழிலுக்குப் புத்துயிர் ஊட்டவே இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு தொழில் உருவாக்கத் தேவையான அடிப்படை வசதிகளுக்காக ரூ.50,000 -மும், தொழிலை மேம்படுத்த ரூ.2 லட்சம் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் சாமானியர்கள் ஒவ்வொருவரையும் தொழில் முனைவோர் ஆகும் முயற்சியாகும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, மண்பாண்டத் தொழிலாளர்கள் சிலர் வந்து என்னிடம் பேசினார்கள். அப்போது, இந்தத் தொழில் எங்களோடு அழிந்து விடும் போல் இருக்கிறது என்று கதறினார்கள். அதுபோன்ற அழிந்துபோகும் விளிம்பில் உள்ள தொழில்களையும், தொழிலாளர்களையும் காப்பாற்றவே விஸ்வகர்மா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டமாக இருந்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம் எனச் செய்யக்கூடாது. நல்ல திட்டங்களை மட்டுமே பாஜகவும், பிரதமர் மோடியும் செய்து வருகின்றனர். விஸ்வகர்மா திட்டம் என்பது பாரத மக்களுக்கான திட்டம் இது குலத்தொழில் திட்டம் அல்ல எனத் தெளிவுபடுத்தியவர்,
தொடர்ந்து பேசினார். அப்போது, பிரதமர் ஜந்தன் திட்டம் கொண்டு வந்தார். அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பெண்களும் பயனடைந்து வருகிறார்கள். உதாரணத்துக்கு, இப்பொழுது ரூ.1,000 நேரடியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. நேரடியாகப் பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்ட திட்டமே இது.
பாரத பிரதமரின் ஒவ்வொரு திட்டமும் தொலைநோக்கு பார்வை கொண்டது. அதற்கு இதுபோன்ற பல திட்டங்களை உதாரணமாகச் சொல்லலாம் என்றார்.
இந்தியாவில் லட்சக்கணக்கான சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அதில், பல லட்சக்கணக்கான பெண்கள் உள்ளனர். எனவே, சுய உதவிக்குழுவில் பெண்களை லட்சாதிபதியாக்குவேன் என்று பாரத பிரதமர் மோடி சபதம் எடுத்துள்ளார். எப்படி, மீனைக் கொடுப்பதற்குப் பதிலாக மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது. அதேபோலத்தான், பாரத பிரதமர் மோடி தனது செயலையும் மிக சிறப்பாகச் செய்து வருகிறார்.
இந்தியா முழுக்க 56 சதவீதம் பேர் ஜந்தன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அதில், குறிப்பாக 53 சதவீதம் பேர் பெண்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.
தமிழக அரசு உள்ளிட்ட யார் பெண்களுக்காக யார் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தாலும் வரவேற்கிறோம். அதே வேளையில், திமுகவினர் தேர்தல் நேரத்தில் தான் இந்த வாக்குறுதி கொடுத்தார்கள். வாக்குறுதி கொடுத்து இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போதுதான் கொடுக்கிறார்கள். எனவே, விடுபட்ட கடந்த இரண்டரை வருடங்களுக்கான தொகையையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்றார்.