முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன்களை நமக்குத் தெரியும், ஆனால், திமுகவை உருவாக்கியவர்களில் ஒருவரான அண்ணாதுரை குடும்பம் குறித்து யாருக்காவது தெரியுமா? தெரியாது. காரணம், அவர்களது குடும்பத்தினரை திமுக தலைவர்கள் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்று திமுகவை ஆரம்பித்த மறைந்த தமிழக முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள். கட்சி, கொள்கை என நமக்கும் அண்ணாதுரை அவர்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால், இன்றைய திமுக தலைவர்களைப் பார்க்கும்போது, அண்ணாதுரை அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் ஏன் இந்தக் கட்சியை ஆரம்பித்தோம் என்று அவரே வருத்தப்பட்டிருப்பார்.
நேற்று திமுகவை ஆரம்பித்த மறைந்த தமிழக முதல்வர் அண்ணாதுரை அவர்களது பிறந்த நாள். கட்சி, கொள்கை என நமக்கும் அண்ணாதுரை அவர்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இன்றைய திமுக தலைவர்களைப் பார்க்கும்போது, அண்ணாதுரை அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் ஏன் இந்தக் கட்சியை ஆரம்பித்தோம்…
— K.Annamalai (@annamalai_k) September 16, 2023
கருணாநிதி மகன்களை நமக்குத் தெரியும். மகன்களை மட்டுமா, மருமகன், மகள், மருமகனின் மகன்கள், மகனின் மருமகன், பேரன்கள், என அத்தனை பேரையும் அரசியலில் எல்லாருக்கும் தெரியும்.
திமுகவை உருவாக்கிய அண்ணாதுரை குடும்பத்தில் யார் பெயராவது நமக்குத் தெரியுமா? யாராவது அரசியலில் இருக்கிறார்களா? எந்தப் பதவியிலாவது இருந்திருக்கிறார்களா? துரைமுருகன் மகனைத் தெரியும். பொன்முடி மகனைத் தெரியும், டி.ஆர்.பாலு மகனைத் தெரியும், ஆற்காடு வீராசாமி மகனைத் தெரியும், ஐ.பெரியசாமி மகனைத் தெரியும். ஆனால், அண்ணாதுரை குடும்பத்தை தமிழக மக்களிடமிருந்து மறைத்து விட்டார்கள்.
அண்ணாதுரை வளர்ப்பு மகன், டாக்டர் பரிமளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். 2008 -ம் ஆண்டு, உடல் நலம் சரியில்லாமல் 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தவர், மருத்துவச் செலவுகளைப் பார்த்து வருத்தப்பட்டு, நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்று தற்கொலை செய்துகொண்டார்.
அன்று திமுக ஆளுங்கட்சி. அவர்கள் கட்சியை உருவாக்கியவரின் மகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவர்கள் குடும்பம் அந்த மருத்துவச் செலவைத் தாங்கும் அளவில் இல்லை என்பதைக் கூடத் தெரியாமல்மகனுக்கும் மருமகனுக்கும் மத்திய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்த மகிழ்ச்சியில் இருந்தார் கருணாநிதி. இதுதான் திமுகவை உருவாக்கிய அண்ணாவுக்கு இன்றைய திமுக கொடுக்கும் மரியாதை. அண்ணாதுரை இருக்கும்போது இருந்த திமுக வேறு, கருணாநிதி காலத்தில் வந்த திமுக வேறு.
பரிமளம் அவர்களது மகள் வயிற்றுப் பேத்தி பிரித்திகா ராணி, 2019 சிவில் சர்வீசஸ் தேர்வில், நாட்டிலேயே 171 ஆவது இடம் பிடித்துச் சாதனை படைத்து, இன்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக உள்ளார். நமது பாரத நாட்டுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறார். தாத்தா பெயரைச் சொல்லியோ, குடும்பப் பின்னணியைச் சொல்லியோ ஒரு அடையாளம் தேட வேண்டிய தேவை அவருக்கு இல்லை. தனக்கென ஒரு அடையாளம் உருவாக்கியிருக்கிறார். அண்ணா அவர்கள் ஒரிஜினல் என்பதை அவரது பேத்தி (Great granddaughter) நிரூபித்திருக்கிறார். உதயநிதியால், TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெறமுடியுமா? ஒரு சாதாரண தனியார் நிறுவன நுழைவுத் தேர்விலாவது தேர்ச்சி பெற முடியுமா?
கட்சியைத் தோற்றுவித்தவர் குடும்பத்தையே மதிக்காதவர்களா வாக்களித்த மக்களை மதிக்கப் போகிறார்கள். விளம்பர ஆட்சி நடத்தி, ஊழல் செய்து கொழுக்கும் திமுகவுக்கு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டப்போவது உறுதி. மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி ஜி நல்லாட்சி தொடர, இம்முறை தமிழகமும் பெரும்பங்கு வகிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.