அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இராணுவ அதிகாரிகள், காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கூட்டுக்குழுவின் அதிரடி நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது. இதையடுத்து, இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர். ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், கூட்டு நடவடிக்கைக் குழுவுக்கும் இடையே நடந்த மோதலில், ஒரு ஜவான் வீரமரணமடைந்தார். மேலும், மோப்ப நாய் ஒன்றும் உயிரிழந்தது. கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பாகிஸ்தான் அடையாளங்களுடன் கூடிய மருந்து மற்றும் மிகப்பெரிய ஆயுதக் குவியல் கைப்பற்றப்பட்டது.
அதேபோல, அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையின்போது, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இராணுவ கர்னல், மேஜர் மற்றும் மாநில காவல்துறை டி.எஸ்.பி. ஒருவர் என 3 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இராணுவ அதிகாரிகள் மற்றும் டி.எஸ்.பி. உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த இராணுவம் கடும் கோவமடைந்தது. மேலும், பாகிஸ்தானுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
இது ஒருபுறம் இருக்க, அதிகாரிகளை இழந்ததால் ஆத்திரமடைந்த இராணுவம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் தீவிரவாதிகளை வேட்டையாட பெரும் படையை களமிறக்கியது. அதேபோல, மாநில காவல்துறையும் களமிறக்கப்பட்டது. இந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் எல்லையில் ஊடுருவ முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, மேற்கண்ட தீவிரவாதிகள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களில் 2 பேரின் உடல்களை கூட்டு நடவடிக்கைக் குழுவினர் மீட்டனர். அதேசமயம், 3-வது தீவிரவாதியின் உடல் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி விழுந்து விட்டது. இந்த உடலை மீட்க முயன்றபோது, பாகிஸ்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், மீட்பதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனினும், தீவிரவாதியின் உடலை மீட்க இந்த இராணுவம் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.