கேரளாவில் நிபா வைரஸ் அதிகரித்து வருவதன் காரணமாக, சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு தோறும் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை மற்றும் வருடப் பிறப்பு போன்றவற்றிற்குத் திறக்கப்படுவது வழக்கம். மேலும், ஒவ்வொரு மாதப் பிறப்பின் போதும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை முதல் 5 நாள்கள் திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் செல்வதற்காகக் கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இணையத்தில் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தேவசம்போர்டு ஆணையருடன் கலத்லோசித்து தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு கேரள மாநில சுகாதாரத்துறைச் செயலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
















