தன்மானம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவை இருக்கக்கூடிய மனிதன் எப்படி திமுகவை ஏற்றுக் கொள்வான் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழக பாஜக சார்பில் கோயம்புத்தூரில் 75 ஜோடிகளுக்கு திருமணத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று 75 ஜோடிகளின் திருமணம் தமிழ் முறைப்படி நடத்தி வைக்கப்பட்டது. இதில் திருமண ஜோடிகளுக்கு 73 சீர்வரிசைகளோடு, ஒரு நாட்டு பசு சீதனமாக கொடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மத்திய ஜல் சக்தி துறை அமைச்சருக்கும், பாஜக தேசிய தலைவருக்கும் தமிழக பாஜக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கர்நாடகா காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு வழங்கக்கூடிய அளவில் குறைவாக இருந்தாலும் தண்ணீர் வழங்க வேண்டும் என காவேரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை வழங்காமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே கர்நாடக அரசு, தமிழகத்திற்கு காவிரி நீரை கட்டாயமாக கொடுத்தே ஆக வேண்டும்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள தீர்ப்பும் தமிழகத்திற்கு சாதகமாக தான் வரும். பிரச்சனைகள் இல்லாமல் இரு மாநில முதல்வர்களும் சுமுகமாக பேசி தீர்த்திருக்க வேண்டிய முடிவு இது.
மேகதாதுவில் அணை கட்டுவது, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என தேவையில்லாத பிரச்சனையை கர்நாடகா காங்கிரஸ் அரசு உருவாக்கியுள்ளது. இதனை இங்குள்ள முதல்வர் ஸ்டாலின் கண்டுக்காமல் ஒரு மாத காலமாக மௌனமாக இருந்துள்ளார். இங்கேயே பேசி முடிக்க வேண்டிய பிரச்சனை தற்போது நிலைமை கைமீறி சென்று மத்திய அரசிடம் சென்றுள்ளது.
இதில் தமிழகத்திற்கு சாதகமான முடிவு வரும் என்பது எள்ளளவிலும் சந்தேகம் இல்லை. நல்ல போலீஸ்காரர்களைப் பார்த்தால் திருடனுக்கு பயம் வரத்தான் செய்யும். என்னுடைய தரத்தை தாழ்த்திக் கொண்டு பதில் சொல்ல மாட்டேன், அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டேன். இதற்கு முன்பும் சொன்னதில்லை.
தற்போது அரசியல் களம் மாறிவிட்டது, இளைஞர்களுக்கான அரசியல் வந்துவிட்டது. இன்னும் அப்படியே பழைய பஞ்சகத்தை பேசி கொண்டிருந்தால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.
இளைஞர்களின் சக்தி தீர்மானிக்கிறது எப்படிப்பட்ட தலைவர்கள் வரவேண்டும் என்று நினைக்கின்றனர். தமிழகத்தில் அந்த மாற்றம் வந்தே தீரும். என்னுடைய கடமை தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பது. இதில் போட்டி, பொறாமை இன்றி, இன்னொரு கட்சியை தாழ்த்தி தான் பாஜக வளரனும் என்ற அவசியம் இல்லை. உழைப்பில் இந்த கட்சி வளர்கிறது.
இதற்கு முன்பு தமிழகத்தில் யார் யார் அமைச்சர்களாக இருந்தார்களோ அவர்களெல்லாம் வசூல் செய்து தான் பழக்கம். அமைச்சர்களாக இருப்பது வசூல் செய்யத்தான். பாஜகவேனர் நடை பயணம் செய்தால் அது வசூல் என எதிர்க்கட்சிகள் நினைத்துக் கொள்கின்றனர்.
நேர்மையான அரசியல்செய்பவர்களிடம் தான் நான் பேசுகின்ற நேர்மை புரியும். வசூல் செய்து அமைச்சராக இருந்தவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியாது.
நடந்து சென்று ஒருவரை கூட்டத்தில் உட்கார வைத்தால் தான் அந்தக் கட்சியின் மதிப்பு என்ன என்று தெரியும். சும்மா பந்தலை போட்டு மக்களை உட்கார வைப்பது பெரியதல்ல.
ஏழு கிலோமீட்டர் நடந்து கூட்டத்தில் உட்காருகிறார்கள் என்றால் அவர்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். சில தலைவர்களுக்கு கள அரசியல் மாறி உள்ளது என்று புரிவதற்கே இன்னும் 10 ஆண்டுகள் வேண்டும். பத்து ஆண்டுகள் கழித்து தெரிந்த பிறகு இதைப் பற்றி நான் பேசுகிறேன்.
தமிழக மக்களைப் பொறுத்தவரை தற்போது அவர்களை போன்று மகனோ, மகளோ அரசியல் தலைவராக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தின் அரசியல்வாதியின் அடிப்படை தன்மை என்று குடும்பத்தில் ஒரு மகனாகவோ மகளாக இருக்க வேண்டும். மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் மற்றும் கஷ்டங்கள் நமக்கு இருக்க வேண்டும் என்று எண்ணி, அந்த குடும்பத்தில் இருந்து வருகின்றவர்களுக்கு, அந்த வலியை உணர்ந்து கொள்ள முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
என் மண் என் மக்கள் யாத்திரையில், பெரும் அளவில் ஆதரவு, மகளிர், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், ஆகியோர் வருகின்றனர். ஏனென்றால் இவர்களுக்கு தான் மாற்றம் வேண்டும்.
ராகுல் காந்தியை உயர்த்த 17 முறை முயற்சித்தனர். ஆனால் ராகுல் காந்தி 17 முறையும் தோல்வியை சந்தித்தார். ஏனென்றால் அதில் உண்மை இல்லை, மேலும் அவரிடத்தில் மண்ணின் தன்மையும், மக்கள் எதிர்பார்க்கக் கூடிய,
தன்மை இல்லை.
உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் நான்கு அமைச்சர்கள் அருகில் இருப்பார்கள். ஊரிலிருந்து வண்டி அனுப்பி ஆள் கூட்டி வருவார்கள். அப்படி இருந்தும் நாற்காலி காலியாக இருக்கும். தன்மானம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவை இருக்கக்கூடிய மனிதன் எப்படி திமுகவை ஏற்றுக் கொள்வான். எப்படி உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக் கொள்வான்? இதனால்தான் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கு நான்கு அமைச்சரை கூட்டி செல்கிறார்.
தமிழக மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் உதயநிதி ஸ்டாலையும் நிராகரித்து விட்டார்கள். இதனால் தான் சனாதன ஒழிப்போம், ஹிந்து தர்மத்தை அழிப்போம் என்று பிதற்றுதல் உடைய வெளிப்பாடு.
பாரதிய ஜனதா கட்சி தனித் தன்மையுடன் ஆட்சிக்கு வரும், 2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக வரும். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். பாஜக வாக தான் ஆட்சிக்கு வரும். எந்த ஒரு கட்சியின் பி டீமாகவோ, சி டீமாகவோ வராது. எங்களுக்கென்று தனிக் கொள்கை, சனாதன தர்மம் எங்களது உயிர் மூச்சு. குடும்ப ஆட்சியில் இருந்து வருபவர்களுக்கு சனாதனம் குறித்து தெரியாது.
முதலில் ஸ்டாலின் பன்னிரண்டாம் வகுப்பு புத்தகத்தை படிக்க வேண்டும். அதில் தான் சனாதர்மத்தை விளக்கி உள்ளனர். மாநில அரசிலுள்ள புத்தகத்தில் சனாதனம் குறித்து உள்ளது, இதனை நாடாளுமன்றத்தில் நாடாளு உறுப்பினர்கள் படிக்கட்டும்.
கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பை பொருத்தவரை தோண்ட தோண்ட, ஒரு புதிய விஷயங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் 22 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அடுத்த தாக்குதலுக்கு தயாரானது தெரியவந்த போது, 22 இடங்களில் சோதனை நடைபெற்று 60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையெல்லாம் பார்க்கும் போது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை என்னவென்று சொல்வது, இன்னும் சிலிண்டர் வெடிப்பு என சொல்லிக் கொண்டு வருகிறார்.
ஆந்திரா, கோயம்புத்தூரில் என்.ஐ.ஏ மூலம் நடைபெற்ற சோதனையினால் அடுத்த தாக்குதலை நிறுத்தி உள்ளனர். கோயம்புத்தூருக்கு வந்திருக்கின்ற ஆபத்து முற்றிலுமாக இன்னும் விலகவில்லை, அந்த ஆபத்து அப்படியே தான் இருக்கிறது.
இந்தியாவின் இறையாண்மைக்கு பல ஆண்டுகளாக எதிராக இருந்த கட்சி திமுக. திமுக கவுன்சிலர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடப்பது என்றால் இதைவிட கேவலமானது இல்லை.
மக்கள் வாக்களிக்கும் போது இவற்றையெல்லாம் யோசித்து, எந்த கட்சி, எந்த தலைவன், எந்த ஆட்சி, அவருடைய பாதுகாப்பிற்கும் நாட்டின் நாட்டின் வளர்ச்சிக்கும், துணையாக இருக்கும் என்பதை மக்கள் தான் யோசிக்க வேண்டும்.
மகளிர் உரிமை தொகையால் எந்த மகளிரும் மகிழ்ச்சியாக இல்லை. 2 கோடியே 25 லட்சம் குடும்ப அட்டையில், 60% மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. இதில் எப்படி மகளிர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் கடந்த மூன்று நாட்களாக குழப்பம் நீடிக்கிறது.
ஆட்சிக்கு வந்தவுடன் தருகின்ற என்று திமுக சொன்ன நிலையில், கடந்த 29 மாதங்களாக தராமல் உள்ளனர். முதல்வர் ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் எந்த கனவு உலகத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திமுக தொடர்ந்து தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை வஞ்சித்து வருகிறது.
விஸ்வகர்மா திட்டத்திற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை. எந்த ஒரு அரசு அதிகாரிகளின் ஒப்புதலும் இந்த திட்டத்திற்கு தேவை இல்லை. மாநில அரசின் ஒத்துழைப்பு தேவையில்லை, இந்த திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடக்கும்.
தன்மானத்தை விட்டுக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.