நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை முன்னிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இன்று தொடங்கியது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர், செப்டம்பர் 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அறிவித்திருந்தார். மேலும், இக்கூட்டத்தொடரை முன்னிட்டு, செப்டம்பர் 17-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
தவிர, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தல் கலந்துகொண்டிருக்கிறார்கள்.