லிபியாவில் காலரா, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால், 300,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லிபியா நாடு தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. லிபியாவின் கிழக்குப் பகுதியைக் கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன.
கடந்த வாரம் லிபியாவைச் சக்தி வாய்ந்த டேனியல் புயல் தாக்கியது. அப்போது, மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
இந்த புயலால் கிழக்கு லிபியா பகுதியில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால், டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைந்தன. இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் வீடுகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். பலர் வெள்ளத்தில் சிக்கிக் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.
டேனியல் புயல், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றின் காரணமாக, இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000-ஐ தாண்டும் என்று கூறப்படுகிறது. டெர்னா நகரில் இதுவரை, 11,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பேரிடரின் காரணமாக, 300,000 குழந்தைகள் காலரா, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு உள்ளிட்ட சுகாதாரப் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து, அந்நாட்டைச் சேர்ந்த பலர் வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுவரை 40,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.