நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறுகிய காலம் நடந்தாலும், இக்கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகளை எடுக்கப் போகிறோம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி, 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இக்கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல, தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, தபால் அலுவலக மசோதா, பத்திரிக்கை மற்றும் பதிவு மசோதா ஆகிய 4 மசோத்தாக்களுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. மேலும், இன்று பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொடங்கிய கூட்டம் நாளை முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நடப்பு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரானது குறுகிய காலம் நடைபெறும் என்றாலும், தற்போதைய சூழலில் மிகப்பெரியது. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுக்க இருக்கிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும். இக் கூட்டத் தொடரின் சிறப்பு என்னவென்றால், 75 ஆண்டுகால பயணமானது புதிய இடத்திலிருந்து தொடங்க உள்ளது.
2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவோம் என்பதுதான் இலக்கு. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் புதிய நாடாளுமன்ற கட்டடடத்தில் எடுக்கப்படும். புதிய நாடாளுமன்றத்தில் புதிய உறுதிமொழிகள் எடுக்கப்படும். நாட்டின் முன்னேற்றத்துக்கு எந்த தடைக் கல்லும் இருக்கக் கூடாது. சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளை பாராட்டுகிறோம். ஜி20 உச்சி மாநாடு ஏழைகளின் குரலை ஒலிக்கக் கூடியதாக இருந்தது” என்றார். அதேபோல, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியதும் உரையாற்றிய பிரதமர் மோடி, இது வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடிய தொடர் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.