திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலின் மலைமேல் அமர்ந்துள்ள உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை வைத்துச் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள அருள்மிகு உச்சி பிள்ளையார் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று அக்டோபர் 1 -ம் தேதி வரை, அதாவது 14 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி, மலை உச்சியில் உள்ள விநாயகருக்கு இன்று 150 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கொழுக்கட்டை, மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோவும், மலை உச்சியில் உள்ள விநாயகர் சன்னதியில் 75 கிலோவும் வைத்து பூஜை செய்யப்படும். பூஜைக்குப் பின்னர், பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.
சதுர்த்தி விழாவையொட்டி, மாணிக்க விநாயகர் சன்னதியில் உள்ள மூலவர் தினமும், சந்தனக்காப்பு அலங்காரம் உள்ளிட்டவைகளில் காட்சி தருவார்.
மேலும், பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர் கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி என பல்வேறு வடிவங்களில் காட்சி தருவார்.
இன்று அதிகாலை முதலே, திருச்சி மட்டுமல்லாது, கரூர், தஞ்சை, புதுக்கேட்டை, பெரம்பலூர், அரியலூர் என அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.