திமுக ஆட்சியில், பழனியில் உள்ள கோ சாலையில், 17 பசுக்களுக்கு சரியான உணவு கிடைக்காமல், துடிதுடித்து இறந்துள்ளதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் 2-ம் கட்ட பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், திமுகவில் தலைவருக்கு தனி இருக்கை உள்ளது. மற்றவர்களுக்கு வேறு இருக்கை இருக்கும். திமுகவில் தலைமுறை தலைமுறையாக ஒரே ஒருவரின் குடும்பமே கோலோச்சி வருகிறது. என்னதான், தகுதி, திறமை இருந்தாலும் சாதாரண தொண்டன் தலைமை பதவிக்கு வரமுடியாது. இதுதான் திமுகவின் இன்றைய நிலை.
தமிழகத்தை பொறுத்தவரை கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுகிய நில மன்னர்களும் சர்வாதிகாரம் செய்து வருகின்றனர். இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.
தற்போது, திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி, பாஜக பேனர்களும், போஸ்டர்களும் கிழிக்கப்படுகின்றன. திமுக ஆட்சி பல ஆண்டுகள் நீடிக்காது. இதை காவல்துறை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இதுவரை பாஜகவைச் சேர்ந்த தொண்டர்கள் மீது 181 தவறான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 17 காவல் துறை அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். தவறாக செயல்பட்ட அத்தனை காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம்.
தமிழகத்தில் அதிக வருமானம் வரக்கூடிய திருக்கோவிலில் பழனியும் ஒன்று. இந்த திருக்கோவிலுக்கு 15,000 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது. ஆனால், 200 கோடி ரூபாய்க்கு மட்டுமே வருமானம் காட்டப்படுகிறது. ஒரு பக்கம் கோவில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மறுபக்கம் கோவில் பணத்தை கொள்ளை அடிக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது
இங்குள்ள கோசலையில் 17 பசுக்கள் உணவு கொடுக்கப்படாமல் பசியால் இருந்துள்ளன. பசியினால் துடித்து இறந்துபோன பசுக்களின் பாவம் சும்மா விடாது என்று சாபம் விட்டார்.