உலகின் டாப் 20 நாடுகளில் இந்தியாதான் அதிக சாத்தியமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருக்கிறது. இந்தியாவை தடுக்க யாராலும் முடியாது என்று கூறியிருக்கும் அமெரிக்க முதலீட்டாளர் ரே டாலியோ, சீனாவின் முன்னாள் அதிபர் டெங் ஜியோபிங்குடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள யு.சி.எல்.ஏ. வளாகத்தில் “ஆல்-இன் உச்சிமாநாடு 2023” நடைபெற்றது. இதில், அமெரிக்க முதலீட்டாளரும், உலகின் மிகப்பெரிய ஹெட்ஜ் நிதிகளில் ஒன்றான பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனருமான ரே டாலியோ கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இந்தியா மற்றும் உலகின் முதல் 20 நாடுகளுக்கான 10 ஆண்டு வளர்ச்சி விகித மதிப்பீடுகள் எங்களிடம் உள்ளன. இதில், இந்தியா மிக உயர்ந்த சாத்தியமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருக்கிறது.
நான் 1984-ம் ஆண்டு சீனா சென்றபோது, அந்நாடு இருந்த இடத்தில் தற்போது இந்தியா இருப்பதாக நினைக்கிறேன். தனிநபர் வருமானத்தைப் பார்த்தால் மோடி இன்னொரு டெங் ஜியோபிங் (சீனாவின் முன்னாள் அதிபர்) என்று நான் நினைக்கிறேன். வளர்ச்சிக்கான சீர்திருத்தங்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ளன. இந்தியா மிகவும் முக்கியமானது. எந்தவொரு பிரச்சனையும் இந்தியாவைத் தடுத்து நிறுத்தும் என்று நான் நினைக்கவில்லை.
வரலாற்றை புரட்டிப் பார்த்தால் நடுநிலையாக இருந்த நாடுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், போர்களில் வெற்றி பெற்றவர்களை விட, நடுநிலை வகித்த நாடுகளே சிறந்தவையாக இருக்கின்றன. எனவே, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும், அதன் நட்பு நாடுகளான ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே மோதல்கள் இருப்பதால், இந்தியா போன்று நடுநிலை வகிக்கும் நாடுகள் பயனடைபவர்களாக இருக்கப் போகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.
பாரதப் பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்கும் போது, உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. 2022-ம் ஆண்டு நிலவரப்படி, இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கி வருகிறது. அதாவது, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.