பெங்களூர் ஸ்ரீ சத்ய கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் தெற்கில் உள்ள ஜெயப்பிரகாஷ் நகர்ப்பகுதியில் ஸ்ரீ சத்ய கணபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் செய்யப்படும் தனித்துவமான சிறப்பு அலங்காரங்கள் மக்களைக் கவரும் வகையில் இருக்கும்.
அதன்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இக்கோவிலில் நாணயங்கள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு தனித்துவமான மற்றும் புதுமையான முறையில் பக்தர்களைப் பிரமிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதக் காலமாக 150 பேர் கொண்ட குழு இந்தச் சிறப்பு அலங்காரத்தைச் செய்துள்ளது. அலங்காரத்திற்கு 10, 20, 50,100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
விநாயகரின் உருவம், பாரதத்தின் வரைபடம், விக்ரம் லேண்டர், சந்திராயன் ஆகியவை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
விநாயகப் பெருமானுக்குச் செய்யப்பட்டுள்ள இந்த தனித்துவமான மற்றும் பிரமிக்க வைக்கும் அலங்காரத்தைக் கண்டு பக்தர்கள் வியந்துள்ளனர். இந்தச் சிறப்பு அலங்காரத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும், ஒரு வாரத்திற்கு இந்த கரன்சி அலங்காரம் இருக்கும்.
இது குறித்து கோவில் அறக்கட்டளை நிர்வாகி கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியைத் தனித்துவமாக கொண்டாடி வருகிறோம், கடந்த ஆண்டும் வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்தோம். இந்த முறையும் விநாயகப் பெருமானுக்குச் சிறப்பு அலங்காரம் செய்து, கோயில் முழுவதும் இந்திய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்துள்ளோம் என்று கூறினார்.