நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதையடுத்து, இந்த சட்ட மசோதா தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 1996-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தற்போது எதிர்கட்சிகளாக இருக்கும் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து வந்தன. ஆனாலும், இந்த மசோதா கடந்த 27 ஆண்டுகளாக அறிமுகமாகி தோல்வியையே தழுவி வந்தது. இத்தோல்விக்கு, மத்தியில் இருக்கும் அரசாங்கத்திற்கு போதிய உறுப்பினர்கள் பலம் இல்லாதது, உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தை எட்ட வைக்க தவறியது போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் பா.ஜ.க., இந்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற முயற்சி எடுத்திருக்கிறது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கெனவே மாநிலங்களைவையில் ஒப்புதல் பெறப்பட்ட இந்த சட்ட மசோதாவுக்கு, தற்போது மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது.
ஆகவே, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.