எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யாமல் நிறுத்திவைக்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்திருக்கிறது.
பொதுவாக நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, பட்ஜெட் கூட்டத்தொடர் (ஜனவரி முதல் மார்ச் வரை), மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்) மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்) என ஆண்டுக்கு 3 முறை முறை மட்டுமே கூட்டப்படும். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதன் பிறகு, டிசம்பர் மாதம்தான் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும்.
ஆனால், செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, அறிவித்தார். அதன்படி, சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத்தொடரில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, வழக்கறிஞராகள் திருத்த மசோதா, தபால் அலுவலக மசோதா, பத்திரிக்கை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா ஆகிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது.
இதனிடையே, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த மசோதாவும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இத்கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் மசோதாக்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான 3 மசோதாக்கள், மூத்த குடிமக்கள் நல மசோதா 2023 ஆகியவையும் கூடுதலாக பட்டியலிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அதேசமயம், எதிர்கட்சிகளால் குற்றம்சாட்டப்பட்ட, “ஒரே நாடு, ஒரே தேர்தல்” மற்றும் “இந்தியா – பாரதம் பெயர் மாற்றம்” ஆகியவை தொடர்பாக எவ்விதத் தகவல் வெளியாகவில்லை.