கடலோர பாதுகாப்பு கட்டமைப்பின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ‘ஆபரேஷன் சஜாக்’ என்ற ஒத்திகையை இந்திய கடலோர காவல்படை மேற்கு கடற்கரைப் பகுதியில் நடத்தியது.
இந்த ஒத்திகை கடலோர பாதுகாப்பு முறையை மறுசீரமைக்கவும், கடலில் மீனவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது.
இந்த ஒத்திகையின் போது, கடலில் உள்ள மீன்பிடி படகுகள், படகுகள் மற்றும் அவற்றின் ஆவணங்களை சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுங்கத்துறை, துறைமுகங்கள் மற்றும் இந்திய கடற்படையைச் சேர்ந்த 118 கப்பல்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றன.
கடலோரப் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அட்டை வழங்குதல், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மீன்பிடி படகுகளில் வண்ணக் குறியீடு, மீன் இறங்குதளங்களை நிர்வகித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் கார்டு ரீடர்களும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஒத்திகை நடத்தப்பட்டு, கடலோர பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பல்வேறு கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதை சரிபார்த்து அவற்றை மேம்படுத்த இந்த ஒத்திகை உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.