காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அந்நாட்டுக்கான இந்திய தூதரை கனடா வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதரை வெளியேற்றி இந்தியா அதிரடி காட்டி இருக்கிறது.
சீக்கியர்களுக்கு தனி மாநிலம் கேட்டு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இப்பிரிவினைவாதிகள் கனடா நாட்டில்தான் அதிகளவில் வசிக்கின்றனர். எனவே, காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்களுக்கு எதிராக கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு, தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா தெரிவித்தாலும், அந்நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது.
இந்த நிலையில்தான், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியது. இதற்கு இந்தியா மறுப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவின் உயர் தூதர் அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றி இருக்கிறது. ஏற்கெனவே இந்தியா- கனடா இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இச்சம்பவம் மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக கனடா நாட்டு எதிர்கட்சிகள் கூட்டிய நாடாளுமன்ற அவசரக் கூட்டத் தொடரில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மேலானி ஜூலி, “நாடுகடத்தப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்டதில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டு உள்ளன. கனடா குடியுரிமை பெற்ற ஒருவர் கனடா மண்ணில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தில் வெளிநாட்டு அரசின் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாதது.
இது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும். இந்த விஷயத்தை தெளிப்படுத்த இந்தியா ஒத்துழைக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன்படி, இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை நாங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றி இருக்கிறோம். அவர் இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்” என்று கூறியிருக்கிறார்.
கனடாவின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, இந்தியாவும் அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவுக்கான கனடா நாட்டின் தூதருக்கு உடனடியாக சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் இன்னும் 5 நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அவர்களுடைய ஈடுபாடு ஆகியவை குறித்து தங்களது கவலையை தெரிவித்த இந்தியா, இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.