அரியலூர் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை ஏற்படுத்த முயன்ற காவல்துறையினரைக் கண்டித்து, இந்து முன்னணியைச் சேர்ந்த பலரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது.
இச்சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி வருவாய்த் துறையினர் சிலையை அப்புறப்படுத்த முயன்றனர். இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கிருந்த பொது மக்களையும் இந்து முன்னணி நிர்வாகிகளையும் காவல்துறையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும் அங்கிருந்த இந்து முன்னணி திருச்சி கோட்டப் பொறுப்பாளர் குணா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறை கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், கண்டன கோஷம் எழுப்பியவாறு இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் இந்து முன்னணியினர் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து நான்கு ரோட்டிற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியைச் சேர்ந்த பலரையும் காவல்துறை கைது செய்தனர்.