கடந்த 124 ஆண்டுகளுக்கு முன்னர், மஹாகவி பாரதியாரின் சனாதன தர்மம் குறித்த சிந்தனைகளை, தற்போது மக்கள் பார்வைக்கு, தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கொண்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சனாதனம் தர்மம் குறித்து.கடந்த 124 ஆண்டுகளுக்கு முன்னர், புரட்சிக் கவிஞர் பாரதியாரின் கருத்துக்களை மேற்காட்டியுள்ளார். அதாவது, புதுவை “இந்தியா”, 1909 ம் ஆண்டு, செப்டம்பர் 4 இதழில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கட்டுரையை சுட்டி முரசொலிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், சனாதன தர்மத்திலேயே இருக்கும் பலவித கட்சிகளும், வகுப்புகளும், கிளைகளும் சூரிய ஜோதியிலே காணப்படும் ஏழுவகை வர்ணங்களைப்போல அவசியத் தன்மை கொண்ட அலங்காரங்களாகுமேயல்லாமல், குறுகிய நோக்கமுடைய சிலர் நினைப்பது போல நமது அழிவுக்கு கருவிகளாக மாட்டா.
அடடா! இந்த ஹிந்துக்களிலே வைஷ்ணவன், சைவன், அத்துவைதி, சாக்தன் முதலிய எத்தனை கிளைகள். இவர்கள் எப்படி விளங்கப் போகிறார்கள்? என்று கூறி சிரிப்பவர்கள் நமது தேச சரித்திரமட்டுமேயன்றி வேறெந்த நாட்டு சரித்திரமும் அறியாதவர்கள்.
இவர்கள் சனாதன தர்மத்தின் இயல்பை மட்டுமேயன்றி வேறெந்த மதத்தின் இயல்பையும் அறியாதவர்கள். மனித அறிவானால் ஆச்ரயிக்கப்பட்டுவரும் எந்த மார்க்கத்திலும் ஆயிரக்கணக்கான கிளைகள் இருத்தல் அத்யாவசியம் என்ற சாதாரண உண்மை இந்த குழந்தைகளுக்கு தெரியாது.
உயிர்த்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பல கிளையுடைமை ஒரு லட்சணம். உயிரடனிருக்கும் ஒரு மனிதனுக்குப் பலவகைப்பட்ட அவயவங்கள் இருந்து பலவகைத் தொழில்கள் நடத்துவதை பார்த்து இக்குழந்தைகள் யோசனை செய்யவில்லை. உயிருடன் இருக்கும் ஒரு மரத்திற்குப் பல மலர்களும், கிளைகளும், கொம்புகளும் இருப்பதைக் கண்டு இவர்கள் சிந்தனை செய்தது கிடையாது. வெட்டுண்டு கிடக்கும் செத்த மரக்கட்டை தான் எப்போதும் ஒரே ரூபமுள்ளதாய், பல கிளைகளற்றதாய் இருக்கும்.
அந்த மரக்கட்டை போல நமது பாரத ஜாதியும், சனாதன தர்மம் ஆகி விடவில்லையென்று விசனமடைவோரைப் பார்க்கும் போது, சங்கீத வித்வானைப் பார்த்து அழத் தொடங்கிய ஆட்டிடையன் கதை ஞாபகத்திற்கு வருகின்றது.
பௌத்தம், கிருஸ்துவம் முதலிய யாதேனும் ஓர் மார்கத்தைப் பற்றிய பழக்கம் இருந்தால் இவர்கள் நமது சனாதன தர்மத்தில் கிளைகள் இருப்பது பற்றி குறை சொல்ல வரமாட்டார்கள்.
ஐயோ! சனாதன கர்பத்திலே பல வகுப்புகள் இருப்பதாகச் சொல்லி நிந்தனை செய்ய வரும் இவர்கள், அந்த வகுப்புகளின் யதார்த்த ரூபத்தையும், குணத்தையும், தொழிலையும் பற்றி ஒரு க்ஷணமேனும் ஆலோசனை செய்திருக்கிறார்களா?
சக்தி மார்க்கம், கிருஷ்ண பத்தி, சிவயோகம், பிரம்மானுபவம் என்பனவற்றில் எதைக் கொய்தெறிந்து விடலாமென்று இவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்? அழகிய ஜீவ விருக்ஷத்திலே பசுமை வாய்ந்த இலைகளையா? இனிய தோற்றமுடைய நறுமலர்களையா? கனிகளையா? எந்த பகுதியை நாசம் செய்ய சொல்லுகிறார்கள்?
சனாதன தர்மம் ஒன்று. பரஸ்பர சஹோதரத்துவமுடைய பல கிளைகள் கொண்ட ஒரு பொருள். நம்முள்ளே பொது நலத்திற்கு விரோதமான வேற்றுமைகளை அவரவர்கள் கண்டா இடத்தில் நீக்கிக் கொள்ள வேண்டுமேயல்லாது நமது பொது நாள் செய்திகளைக் காட்டிலும் வேற்றுமைச் செய்திகள் வெகு முக்கியம் போல பின்னவற்றையே பிரமாதமாக முரசொலியுடன் பிரசங்கித்துக் கொண்டிருக்கலாகாது என தெரிவித்துள்ளார்.