யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
கடந்த 17-ந் தேதி சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் 45-வது உலகப் பாரம்பரிய சின்னங்களுக்கான குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில், சர்வதேச நாடுகளின் பல்வேறு பாரம்பரிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்தியாவின் சாந்திநிகேதன் மற்றும் ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சோமநாதபுரா மற்றும் ஹலபீடு அருகே பேலூரில் ஹொய்சாலா கோயில்கள் உள்ளன. இது 12, 13-ஆம் நூற்றாண்டுகளில், ஒய்சாளா வம்சாவளியினரால் கட்டப்பட்ட சிவன் கோயில்களாகும். இவற்றை உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது.
இதேபோல், மேற்கு வங்காளத்தின் பிம்பும் மாவட்டத்தில் உள்ள சாந்திநிகேதன், உலகப் பாரம்பரிய சின்னத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கலாசார தலத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்காக நீண்டகாலம் வரை இந்தியா போராடி வந்தது.
யுனெஸ்கோவால் சேர்க்கப்பட்ட உலகப் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் 42 இடங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில், கலாச்சார பிரிவில் 34 பாரம்பரிய இடங்களும், இயற்கை பிரிவில் ஏழு பாரம்பரிய இடங்களும் மற்றும் கலப்புப் பிரிவில் ஒரு இடமும் குறிப்பிடத்தக்கது.