புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், எம்.பி.,க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசி முடித்தவுடன், ‘மைக்’ தானாகவே அணைக்கப்படும் வகையில், தானியங்கி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஆங்கிலேயர் காலத்து பார்லிமென்ட் கட்டடத்துக்கு விடைகொடுக்கும் வகையில், அதனருகே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, அதிநவீன வசதிகளுடன், புதிய பார்லிமென்ட் கட்டடத்தை கட்டி உள்ளது.
இந்நிலையில், பழைய பார்லிமென்ட்., கட்டடத்தில், சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இன்று முதல் வரும் 22 வரை, புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடக்க உள்ள நிலையில், அங்கு பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, புதிய பார்லிமென்ட் காகிதமற்றதாக இருக்கும். இதற்காக, அனைத்து எம்.பி.,க்களின் இருக்கை முன், டேப்லெட் கம்ப்யூட்டர் இருக்கும். இதில், சபை அலுவல்கள் குறித்த தகவல்களை எம்.பி.,க்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல கடுமையான விதிமுறைகள் உள்ளன. புதிய பார்லிமென்ட்., கட்டடத்தில், ஆறு நுழைவாயில்கள் உள்ளன. இவற்றுக்கு, யானை, கருடன், கழுகு என, உயிரினங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
சபையில் பேசும் போது, ‘மைக்’ அணைக்கப்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குற்றம் சாட்டுவது, அரசுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதை சரிசெய்யும் பொருட்டு, புதிய பார்லிமென்ட்யில் உள்ள இரு சபைகளிலும், ‘மைக்’ அணைக்கப்படுவதற்கு, தானியங்கி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, ஒதுக்கப்பட்ட நேரத்தில் எம்.பி., பேசி முடித்த பின், ‘மைக்’ தானாகவே அணைக்கப்பட்டு விடும். இது போன்ற பல்வேறு நவீன வசதிகள், புதிய பார்லிமென்ட்யில் செய்யப்பட்டு உள்ளன.