முதன்முதலில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி, நேரடியாக காலிறுதிக்குச் செல்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 23ஆம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்தியாவை சேர்ந்த 65 விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கப்பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை தொடர் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்க உள்ள நிலையில் முன்னணி வீரர்கள் அந்தத் தொடரில் பங்கேற்கிறார்கள். இதனால் இந்திய அணி இரண்டாம் தர வீரர்களை தேர்வு செய்து இந்தத் தொடரில் களம் இறங்குகிறது. இதற்குக் கேப்டனாக சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ருதுராஜ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறார். இதனால் ருதுராஜ், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் முதல் வாரத்தில் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுகிறது.
ஆனால் இந்தியா பலம் வாய்ந்த கிரிக்கெட் அணி என்பதால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேரடியாக காலிறுதியில் விளையாடும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்திய ஆடவர் அணி தங்களது முதல் ஆட்டத்தில் காலிறுதியில் அக்டோபர் மூன்றாம் தேதி இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு விளையாட இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து அரை இறுதி அக்டோபர் ஆறாம் தேதி காலை ஆறு முப்பது மணிக்கு நடைபெற இருக்கிறது. இதிலும் இந்தியா வெற்றி பெற்றால் வரும் அக்டோபர் ஏழாம் தேதி காலை 11 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும்.