இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட 2 நாட்களும் ஆக்கப்பூர்வமான நாட்கள் என்றும், இந்தியாவுக்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடமைப்பட்டிருப்பதாகவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சபையின் இராஜாங்க பேச்சுவார்த்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜன் கிர்பி தெரிவித்திருக்கிறார்.
இந்தியா தலைமையிலான ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு தேசியத் தலைநகர் டெல்லியில் கடந்த 9, 10-ம் தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஜி20 அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உட்பட 20 நாடுகளின் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்களாக 20 நாடுகளின் தலைவர்கள் என 40 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் ஏகமனதாக ஏற்கப்பட்டது வரலாற்று சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில்தான், இந்தியாவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற 2 நாட்களும் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சபையின் இராஜாங்க பேச்சுவார்த்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபைக்கான 78-வது அமர்வில் உரையாற்றிய ஜான் கிர்பி, “அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவில் ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, உலகம் பயணிக்க வேண்டிய திசை குறித்து தன்னம்பிக்கையுடனும், நேர்மறையான எண்ணங்களுடனும் செயல்பட்டு வருகிறார்.
பெரும் செயல்கள் ஜி20 மாநாட்டில் செய்து முடிக்கப்பட்டன. இதற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தலைமையேற்ற இந்தியாவிற்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். திட்டமிடுதல் மட்டுமல்லாது செயல்படுத்தலிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. இந்தியாவில் இருந்த 2 நாட்களும் மிக மிக ஆக்கப்பூர்வமான நாட்களாக இருந்தது” என்று கூறியிருக்கிறார். ஜி20 உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியுடன் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.