1927 -ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி சீர்காழி அருகில் உள்ள சட்டநாதபுரத்தில் ராமசாமி -செல்லம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ஆர்.ராம கோபாலன்.
இவருடன் உடன்பிறந்தவர்கள் 11 பேர். ராம கோபாலனுக்கு 1934 -ம் ஆண்டு பூணூல் போட்டு முறையாகச் சடங்குகள் செய்யப்பட்டன. 1932 முதல் 1943 வரை சீர்காழியில் உள்ள ஒரு பள்ளியில் கல்வி பயின்றார்.
1943 -ம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து சென்னையில் வேப்பேரியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பை முடித்தார்.
பாலிடெக்னிக் கல்லூரியில் தன்னோடு சேர்ந்து படித்த முத்து என்பவர் மூலம் ஆர்எஸ்எஸ் அறிமுகம் கிடைத்தது. அப்போது, 1944 -ம் ஆண்டு முத்து உடன் கோபாலபுரத்தில் நடந்த ஷாகாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். அப்போது, முதல் ஆர்எஸ்எஸ் மீது தீவிர பற்று ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 1947 -ல் குடியாத்தத்திலிருந்த வடக்கு ஆற்காடு எலக்ட்ரிக்கல் சப்ளை கார்ப்பரேஷனில் ஜூனியர் பொறியாளர் வேலை கிடைத்தது. அங்கு வேலை பார்த்துக் கொண்டே குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஷாகா ஆரம்பித்து நடத்தினார். அவர் நடத்திய முதல் ஷாகா இதுதான்.
1949 -ம் ஆண்டு முதல் ஆர்ஆர்எஸ் முழு நேர ஊழியராக பணியாற்றினார். 1952 -ம் ஆண்டு முதன் முதலில் திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டார். 1960-ம் ஆண்டு பாலக்காடு தாலுகா அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1964 -ம் ஆண்டு பிரசாந்த பிரமுக் ஆனார். 1965-ல் ஆர்எஸ்எஸ் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1980 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கரூரில் ஆர்எஸ்எஸ் மாநில கூட்டம் நடந்தது. இதிலே தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலையைச் சமாளிக்க ஒரு தனி இயக்கம் தேவை என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்தக் கூட்டத்திலே இந்து முன்னணி என்ற அமைப்பு துவங்கப்பட்டது. அதன் அமைப்பாளராக அப்போது ஆர்.ராம கோபாலன் நியமிக்கப்பட்டார்.
சில ஆண்டுகள் ஆர்எஸ்எஸின் மாநில இணை அமைப்பாளர் மற்றும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் என இரண்டு பொறுப்புகளிலும் செயல்பட்டார்.
1982 -ம் ஆண்டு இந்து எழுச்சி மாநாட்டுக்குப் பிறகு குமரி மாவட்டத்தில் பெரிய அளவில் கலவரம் வெடித்து. இதனால், இந்து முன்னணி போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
தடையை மீறி போராட்டம் நடத்தி கைதானார். 1984 -ம் ஆண்டு ஜூலை 18 -ம் தேதி கோவையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு ராஜபாளையம் செல்ல மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அவர் மதுரையில் இறங்கியதும், அவர் பின்னால் வந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள் சிலர் ஆர்.ராம கோபாலனை படுகொலை செய்ய முயன்றனர். ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மருத்துவச் சிகிச்சைக்குப் பின்பு படிப்படியாக நலம் பெற்றார். பின்பு, பட்டி, தொட்டி எங்கும் இந்து முன்னணியை கொண்டு சென்றார்.
தமிழகம் முழுவதும் ஆன்மீகத்தை வளர்ப்பது, கலாச்சாரத்தை வளர்ப்பது, பாரம்பரியத்தை வளர்ப்பது, நாகரீகத்தை வளர்ப்பது, தேசப்பற்றை வளர்ப்பது எனத் தனது வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார் ராம கோபாலன்.
இப்படி பொதுவாழ்வில் புகழ் பெற்ற ராம கோபாலன் ஜி, 2020 -ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் மறைந்தாலும், அவரது புகழ் ஓங்கி ஒலித்துக் கொண்டே உள்ளது. ஜெய் ஹிந்த்.