உலக அளவில் புத்திசாலித்தனம், கடின உழைப்பு ஆகியவற்றில் சிறந்தவர்கள் இந்தியர்கள் என்பதை உலகெங்கிலும் நிரூபித்து வருகிறார்கள். உலகளவில் பெரிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், உரிமையாளர்களாக இருப்பதிலும் இந்தியர்கள் கொடிநாட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், அரிஸ்டா நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெயஸ்ரீ உல்லால் குறித்துப் பார்ப்போம்,
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ உல்லால் மார்ச் 27, 1961-ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். பின்னர், டெல்லியில் உள்ள இயேசு, மேரி கான்வென்ட்டில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
அதன் பின், சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் இளங்கலை பட்டமும், சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முதுகலை பட்டமும் பெற்றார்.
ஜெயஸ்ரீ உல்லால் 1992-ஆம் ஆண்டு கிரெசெண்டோ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அதை சிஸ்கோ சிஸ்டம்ஸ் வாங்கியது. 15 ஆண்டுகள் இந்நிறுவனத்தின் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர்.
இதன் பின், 2008-ஆம் ஆண்டு ஆண்டி பெக்டோல்ஷெய்ம் மற்றும் டேவிட் செரிடன் ஆகியோருடன் இணைந்து அரிஸ்டா நெட்வொர்க்குகளை நிறுவினார்.
2014-ம் ஆண்டு அரிஸ்டா பிசினஸ் மற்றும் கிளவுட் நெட்வொர்க்கிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். ஜீரோவாக இருந்த நிறுவனத்தின் மதிப்பை தன்னுடைய கடின உழைப்பாலும், சிறந்த அறிவாற்றலாலும் அடுத்த சில வருடங்களிலேயே பல பில்லியன் டாலர்களாக உயர்த்தினார்.
2023-ஆம் ஆண்டு போர்ப்ஸ் நிறுவனத்தின் ‘America’s Self-Made Women’ என்ற பட்டியலில் 15-வது இடத்தையும், பில்லியனர்ஸ் பட்டியலில் 1312-வது இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.