சமூக நீதி என்று உதட்டளவில் பேசாமல், பாஜகவின் உண்மையான சமூக நீதியைப் பின்பற்றுவாரா முதல்வர்? எனத் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதம் ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆனால், பாஜக அரசு அமைந்த 2014 -ம் ஆண்டுக்குப் பின்னர் தான் மத்திய அரசின் துறைகளில் உரிய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டியலின, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2014 முதல் தற்போது வரை ஒவ்வொரு வருடமும் சராசரியாக 18 % பட்டியலினத்தைச் சேர்ந்தோருக்கும், 8 % பழங்குடியினத்தோருக்கும், 30 % இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 9 ஆண்டுகளாக அதிக அளவு மாணவ, மாணவிகள் இடம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020-21ல், 28 % பட்டியலின மாணவர்களும், 47% பழங்குடியின மாணவர்களும், 31.7% இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் மத்திய அரசின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இணையும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது பாஜக அரசில் இட ஒதுக்கீட்டைச் சிறந்த அளவில் செயல்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது.
ஆனால், தி மு க அங்கம் வகித்த 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்த போது 12 % க்கும் குறைவான இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மட்டுமே மத்திய அரசுப் பணிகளிலிருந்தனர் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பியவர், 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியிலிருந்த போது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முழுமையாகப் பணி நியமனம் செய்யாதது ஏன்? என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும்.
இனிமேலும் பாஜக அரசு குறித்த உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவிப்பதை முதலமைச்சர் தவிர்க்க வேண்டும். சமூக நீதி என்று உதட்டளவில் பேசாமல், பாஜகவின் உண்மையான சமூக நீதியைப் பின்பற்றுவாரா முதல்வர்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.