இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட் கோலி தற்போது கிரிக்கெட் தவிர மற்ற விஷயங்கள் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார். இளைஞர்களுக்கு சில அறிவுரைகளையும் கூறியுள்ளார்.
கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் விராட் கோலி. கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் இவர் பேசிய காணொளி ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் சிறுமி ஒருவர் விராட் கோலியைப் பேட்டி எடுத்தார். அதில், விராட் கோலி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். குறிப்பாக, அவரது வாழ்க்கையில் அவருக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர் அவரது மனைவிதான் என்றும், அவரிடம் இருந்து தைரியம், தன்னம்பிக்கை, கடின உழைப்பு ஆகியவற்றைத் தான் கற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர், கிரிக்கெட்டை தவிர்த்து தான் செய்ய நினைப்பது நிறைய இருப்பதாகவும், தன்னால் முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது, பிறருக்கு உபயோகமான வாழ்க்கையை வாழ நினைப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது விராட் கோலிக்கு 35 வயதாகிறது. அவர் தன்னுடைய 50 வயதில் என்ன செய்யப் போகிறார் என்று திட்டமிடவில்லை என்று கூறியுள்ளார். மேலும், அவர் இளைஞர்களுக்கு ஒரு சில அறிவுரைகளை கூறியுள்ளார். அதில், எந்தப் பணியை செய்தாலும், அதை காதலித்து முழு மனதுடன் செய்ய வேண்டும் என்றும், நாம் செய்யும் காரியங்களை நல்லெண்ணத்தோடு 100 சதவீதம் நம்மை அர்ப்பணித்து செய்தால் அந்த காரியத்தில் வெற்றி பெற கடவுள் நமக்கு உதவுவர் என்றும் கூறியுள்ளார்.