ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தோனேசியா அணிக்கு எதிரான போட்டியில் மங்கோலியாவைச் சேர்ந்த பெண்கள் அணி வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா வரும் 23-ம் தேதி நடைபெற இருந்தாலும், பல போட்டிகளுக்கான தொடக்கப் போட்டி நேற்றே தொடங்கியது. அந்த வகையில், ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டித் தொடரில் மகளிர் டி20 போட்டியில் இந்தோனேசியா-மங்கோலியா அணிகள் நேற்று மோதின. இதில், டாஸ் வென்ற மங்கோலியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தோனேசியா அணியின் தொடக்க வீராங்கனைகள் சிரிப்பாக விளையாடி வந்தனர். இதில் தேவி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடவே, 20 ஓவர்கள் முடிவில் இந்தோனேசியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது.
இதைத் தொடர்ந்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மங்கோலியா அணி களமிறங்கியது. ஆனால், தொடக்க வீராங்கனைகள் முதல் அனைவரும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். இதனால், மங்கோலியா அணி 10 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. மங்கோலியா அணி வீராங்கனையின் அதிகபட்ச ரன்னே 5 தான் என்பது குறிப்பிடத்தக்கது.