ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அக்டோபர் 23ம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆட்சி நிர்வாகம் நடத்தப்படும்.
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதாவது, அமராவதியில் சட்டசபையும், கர்னூலில் உயர்நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் அமைக்க முடிவு செய்தார்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் ஆந்திர தலைநகராக அமராவதியே தொடர வேண்டும் என ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அப்போது, அமராவதியே தலைநகராக தொடர வேண்டும் என அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு தடைவிதிக்கப்பட்டது. இவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆந்திராவின் தலைநகரை விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்போவதாக ஜெகன்மோகன் அறிவித்திருந்தார்.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தசரா பண்டிகையின் முக்கிய நாளான விஜயதசமி (அக்டோபர் 23) முதல் விசாகப்பட்டினம் ஆந்திர தலைநகராக செயல்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன், ‘அக்டோபர் 23ம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆட்சி நிர்வாகம் நடத்தப்படும். விசாகப்பட்டினத்தில் அரசு அலுவலகங்களை தேர்வுச் செய்வதற்கான குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, முன்கூட்டியே தேர்தல் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
முன்னதாக ஆந்திராவுக்கு குண்டூர் – விஜயவாடா இடையே மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். அதன்படி, அமராவதியில் தலைமைச் செயலகம், சட்டசபை அமைக்கப்பட்டு, அங்கேயே சில சட்டசபை கூட்டங்களும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.