நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான மசோதைவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் நிலையில், இம்மசோதா தங்களுடையது என்று காங்கிரஸ் உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு கடந்த 27 வருடங்களாக மசோதைவை நிறைவேற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பி பா.ஜ.க. பதிலடி கொடுத்து வருகிறது.
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி உரிமை கொண்டாடி வருகிறது. இம்மசோதா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது எங்களுடையது என்று கூறினார். அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தங்களது என்று கூறி வருகின்றனர்.
ஆனால், இதற்கு பா.ஜ.க.வினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எங்களுடையது என்று உரிமை கொண்டாடும் காங்கிரஸ் கட்சி, கடந்த 27 ஆண்டுகளாக அந்த மசோதாவை நிறைவேற்ற ஏன் முயற்சி செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறது. மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் பா.ஜ.க.வைச் சேர்ந்த வாஜ்பாய் ஆட்சியின்போது, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 6 முறை தாக்கல் செய்யப்பட்டபோதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள்தான் கடுமையாக எதிர்த்து மசோதா நிறைவேறுவதை முடக்கினார்கள் என்று குற்றம்சாட்டி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் பா.ஜ.க. முன்வைக்கும் வாதங்கள் இவைதான்…
2010-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு பா.ஜ.க. ஆதரவுடன் இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியது. ஆனால், மக்களவையில் மசோதாவை நிறைவேற்ற, தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் ஒருமித்த கருத்தைப் பெறத் தவறிவிட்டது. அதேபோல, 1998-ம் ஆண்டு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேந்திர பிரகாஷ் யாதவ், அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் எம்.தம்பிதுரையின் கையிலிருந்த மசோதாவைப் பறித்தார். மேலும், சக உறுப்பினர் அஜித்குமார் மேத்தாவுடன் சேர்ந்து, சபாநாயகரின் இருக்கைக்கு ஓடிச் சென்று, அங்கிருந்த பிரதிகளையும் எடுத்துச் சென்றார்.
1998 இந்தியா டுடே அறிக்கையின் படி, மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்கட்சி உறுப்பினர்களான சுபாஷ் யாதவ் (ஆர்.ஜே.டி.), சபீர் அலி (எல்.ஜே.பி.), வீர்பால் சிங் யாதவ், நந்த் கிஷோர் யாதவ், அமீர் ஆலம் கான் மற்றும் கமல் அக்தர் (எஸ்.பி.) மற்றும் எஜாஸ் அலி ஆகியோர் மசோதாவுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். 2019 பிரஸ் இன்பர்மேஷன் பீரோ அறிக்கையின் படி, 2010-ல் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, சமாஜவாதி உறுப்பினர் அபு அசிம் ஆஸ்மி மற்றும் அவரது கட்சி சகாக்கள், அப்போதைய சட்ட அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜிடம் இருந்து மசோதா நகலை பறிக்க முயன்றனர். மேலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை திரும்பப் பெறும்படி கூட்டலிட்டனர்.
2010 இந்தியா டுடே அறிக்கையின் படி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜாஃபர் ஷெரீப் மற்றும் ஷகீல் அகமது கான் ஆகியோர் மசோதாவுக்கு எதிராக நாங்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று கூறி, அவை நடவடிக்கைகளை சீர்குலைத்த சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவை ஆதரித்தனர். மாநிலங்களவை உறுப்பினரான கபில் சிபலும் 1993-ன் 73 மற்றும் 74-வது திருத்தங்களின் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்தார். இதையடுத்து, சோனியா காந்தி தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு இருப்பதை ஏற்றுக்கொண்டார். இதன் விளைவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கிடப்பில் போடப்பட்டது.
1997-ல், மறைந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், மக்களவையில் “கௌன் மஹிலா ஹை, கவுன் நஹின் (யார் பெண் யார் பெண் இல்லை. குட்டை முடி கொண்ட பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்) என்றார். அதேபோல, மறைந்த முலாயம் சிங் யாதவ் 2010-ல் கிராமப்புற பெண்களுக்கு இடஒதுக்கீடு பயனளிக்காது என்று கூறினார். மேலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றம் பெண்களால் நிரம்பி வழியும் என்று கூறினார்.
இன்று அவரது மகன் பிற்படுத்தப்பட்ட, தலித், சிறுபான்மை மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு திட்டவட்டமான சதவீதத்தில் தெளிவாக இருக்க வேண்டும் என்று பிரசங்கம் செய்கிறார். ஆனால், அவரது தந்தையோ 1999-ல், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நான் ஆதரிக்கவில்லை. இதை குறைக்க வேண்டும். அதிகபட்சமாக 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றார். இது தவிர, 2010-ல் லாலு பிரசாத் யாதவ், தனது கட்சி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்ப்பதாக கூறியிருந்தார். 1998-ல், லாலு, பெண்கள் இட ஒதுக்கீட்டால் சமூக நீதியின் சக்திகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் முகமது அலி, அஷ்ரப் பாத்மி போன்றவர்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மதச் சாயம் பூசினார்கள். “இந்த அவையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றி பேசும்போது, பல சமூக விஷயங்கள் பின்தங்கியுள்ளன. இதைப் பரிசீலிக்கும் போதெல்லாம், அதில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று நாங்களும், எங்கள் கட்சி மக்களும் நம்புகிறோம். அதேநேரத்தில், இந்தியாவிற்குள் வாழும் 20 சதவீத சிறுபான்மை மக்களை முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்றனர்.
ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி, I.N.D.I. கூட்டணியில் அங்கம் வகிக்காவிட்டாலும், 2010-ல் இந்த மசோதாவை “பிற்போக்கு” என்று குறிப்பிட்டதோடு, இது முஸ்லிம்களின் நலன்களுக்காக இல்லை என்று கூறினார். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தனது சமூகத்திற்கு சாவுமணியாக இருக்கும் என்றும், நாடாளுமன்றம் ‘இந்து மக்களவை’யாக மாறும் என்றும் கூறினார். ஜாமியத் உலமா-இ-ஹிந்த் (இரு பிரிவுகள்), ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், அகில இந்திய முஸ்லீம் மஜ்லிஸ்-இ முஷாவரத், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜமியத் அஹ்லே ஹதீஸ் ஹிந்த் உட்பட ஏறக்குறைய ஒவ்வொரு முஸ்லிம் மதகுரு மற்றும் சமூகக் குழுவும் இந்த மசோதாவை எதிர்த்தன. மேலும், மிஸ்ரா குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரியும் மசோதாவுக்கு எதிராகவும் நாடு தழுவிய பேரணிகளை ஏற்பாடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.