தமிழக உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் தொகுதியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த தொகுதி விவசாயிகளும், பொது மக்களும் வரும் 22 -ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம், கண்டாச்சிபுரம் வட்டம், திருக்கோவிலூர் தொகுதி ( உயர் கல்வித் துறை அமைச்சர் தொகுதி ) பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பரனூர் ஏரிக்கு அரகண்டநல்லூர் பகுதியிலிருந்து வரும் ஆற்றுவாய்க் காலை தூர்வாரி ஆக்கிரமிப்பு அகற்றி ஆற்றிலிருந்து நீர்வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்,
ஏரியின் உபரி நீர் வெளியேறும் கோடி வாய்க்கால் கரைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையில் பல இடங்களில் ஏற்பட்ட உடைப்பைச் சரி செய்தல் மற்றும் தூர்வாரி ஆறு வரை செல்லும் இந்த வாய்க்காலைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும்
ஏரியில் நீர் திறக்கும் மதகு மற்றும் ஏரிக்கரையைச் சீரமைத்து அதன் ஓரம் இருந்த பழைய வண்டிப்பாதையை மீண்டும் விவசாயத்திற்குப் பயன்படும்படி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும்,
பல வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைத்து சாத்தியக்கூறுகள் இருப்பதாக மாவட்ட கால்நடைத் துறை தெரிவித்தும் இன்னும் கிடைக்காத கால்நடை மருத்துவமனை விரைவில் அமைத்துத் தர வேண்டும், அடிப்படை சாலை வசதி சுமைதாங்கி பகுதியிலிருந்து காலனி வழியாக முகையூர் வரை செல்லும் சாலையானது மிகவும் மோசமடைந்துள்ளதை சரி செய்ய வேண்டும் என்றும், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.
ஆனால், போராட்டத்தை முடக்கும் வகையில், திமுகவினர் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எந்த தடை வந்தாலும், போராட்டம் நடைபெற்றே தீரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.