விக்ரம் லேண்டரும், ரோவரும் உறக்கத்தில் இருந்து எழுந்துப் புதிய பணிகளைத் தொடங்கவுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம், நிலவில் தனது ஆராய்ச்சியை நடத்தி வந்தது.
தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, நிலவின் தட்பவெட்ப நிலையைக் கணக்கிட்ட ரோவர், கந்தகம் இருப்பதையும் கண்டுபிடித்தது. அதேபோல, அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம், மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறது.
சூரிய சக்தியால் இயங்கும் வகையில் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை வடிவமைக்கப்பட்டன. இதனால் அது நிலவில் சூரிய ஒளி இருக்கும் நேரம் மட்டுமே செயல்படும். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு அது தரையிறங்கிய இடத்தில் சூரிய ஒளி இருந்தது.
நிலவில் 14 நாட்கள் பகல் மற்றும் 14 நாட்கள் இரவு இருக்கும். தற்பொழுது, நிலவில் இரவு நேரம் என்பதால், லேண்டரும், ரோவரும் உறக்க நிலையில் இருக்கிறது. எனவே, இஸ்ரோ விஞ்ஞானிகள் அங்கு பகல் வருவதற்காகக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் லேண்டரையும், ரோவரையும் வடிவமைக்கும் போதே, மீண்டும் சூரிய ஒளி வரும்போது அவை தன்னை தானே செயல்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கி உள்ளனர்.அதன்படி தற்போது விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் வரும் 22-ந் தேதி சூரிய ஒளி வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து வரும் நிலையில் லேண்டரும், ரோவரும் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.