நாட்டை நடத்துவது அரசாங்கம்தான், செயலாளர்கள் அல்ல என்பது ராகுல் காந்திக்கு யார் புரிய வைப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “எனது சகாக்களில் ஒருவர் நாட்டை நடத்துபவர்களின் எண்ணிக்கையில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறியிருக்கிறார். நாட்டை நடத்துவது அரசாங்கம்தானை தவிர, செயலாளர்கள் அல்ல என்பதை அவருக்கு (ராகுல் காந்திக்கு) யார் புரிய வைப்பார்கள். மேலும், ஓ.பி.சி.க்களுக்காகப் பேசுவதாகக் கூறுபவர்கள், ஓ.பி.சி.க்கு பிரதமர் பதவியைக் கொடுத்தது பா.ஜ.க.தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் கொள்கையை அமைச்சரவையும், நாடாளுமன்றமும்தான் முடிவு செய்யும் என்று நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. எங்கள் கட்சியில் ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்த 29 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு ஒப்பீடு செய்ய விரும்பினால், எங்களிடம் வாருங்கள்.
எங்கள் மத்திய அமைச்சரவையில் ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்த 29 அமைச்சர்கள் உள்ளனர். 1,358 சட்டமன்ற உறுப்பினர்களில் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த 365 பேர் எங்கள் கட்சியில் உள்ளனர். ஓ.பி.சி. பிரிவினரின் நலன் குறித்து தொடர்ந்து பேசுபவர்களின் எண்ணிக்கையில் இது அதிகம். நீங்கள் ஓ.பி.சி. பற்றி பேசுகிறீர்கள். ஆனால், இந்த நாட்டிற்கு ஓ.பி.சி. சமூகத்தில் இருந்து பிரதமரை வழங்கியது பா.ஜ.க.தான்.
தேர்தலுக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் விரைவில் நடத்தப்படும். அதன் பிறகு பெண்கள் நாடாளுமன்றத்தில் அதிக குரல் கொடுப்பார்கள். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவருவதற்கான 5-வது முயற்சி இது. தேவகவுடா முதல் மன்மோகன் சிங் வரை இந்த மசோதாவைக் கொண்டு வர 4 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி இருந்தும் இந்த மசோதா நிறைவேற்றப்படாததற்கு என்ன காரணம்?
பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து, பெண்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் சமமான பங்கேற்பு ஆகியவை அரசாங்கத்தின் உயிர் சக்தியாக உள்ளது. இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள், மகிளா சம்மன் சேமிப்பு திட்டம், மகப்பேறு விடுப்பு மற்றும் பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், ஒரு பெண் குழந்தைக்கு கல்வி கொடுங்கள் எனப் பெண்களுக்கு அதிகாரம் அளித்த முயற்சிகள் ஒருபுறம் . அதேசமயம், இந்த நாட்டில் 5 தசாப்தங்களுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால், 11 கோடி குடும்பங்கள் கழிப்பறை இல்லாதவர்களாக இருந்தனர்.
அவர்களால் ‘கரீபி ஹடாவோ’ கோஷம் போட்டாலும், ஏழைகளுக்கு எந்த ஏற்பாடும் செய்ய முடியவில்லை. ஒரு வீட்டில் கழிப்பறை இல்லாதபோது, அதிகம் பாதிக்கப்படுவது மகள்கள், சகோதரிகள் மற்றும் தாய்மார்கள்தான். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நாட்டில் முடிவெடுப்பதிலும், கொள்கை வகுப்பதிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும். நாம் இதற்கு முன்பு 4 முறை பெண்களை ஏமாற்றி இருக்கிறோம். ஆகுவே, தற்போது நாம் அரசியலுக்கு அப்பால் உயர வேண்டும். இந்த புதிய தொடக்கத்தில் நாம் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்துடன் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பை திருத்த வேண்டும் என்று எதிர்கட்சிகளுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.