திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவத்தை யொட்டி, 36 மணி நேரம் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்றது திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில். இந்த திருக்கோவிலுக்கு, உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன.
இதில் கடந்த 18-ம் தேதி முதல் வரும் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில், திருப்பதி திருக்கோவிலில் பிரம்மோற்சவத்தை ஒட்டி திருமலையில் 36 மணி நேரம் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்கள் செல்ல திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.