தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில், மர்ம நபர்கள் மலம் கலந்ததாகப் புகார் எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில், பனைக்குளம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், தண்ணீர் குடிக்கப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டி அருகே சென்றுள்ளனர். அப்போது, குடிநீர்த் தொட்டியில் இருந்து கடுமையாகத் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால், அந்த நீரைக் குடிக்காமல் வந்த மாணவர்கள், இது குறித்து தங்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் இணைந்து சென்று, சம்பந்தப்பட்ட குடிநீர்த் தொட்டியை நேரில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அந்த நீரில் கடும் துர்நாற்றம் வீசியதும், அதில் மர்ம நபர்கள் மலம் கலந்து இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பராப்பட்டி காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும், குற்றவாளிகள் அந்த பகுதியில் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளார்களா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கல்வி அலுவலர் துளசிராமனும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில், குடிநீர்த் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காணுவதில் காவல்துறை தடுமாறி வருவதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், இந்த சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர் என மாணவர்களின் பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.