கரூரில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் உள்ளது தொழிலாளர் நல வாரிய அலுவலகம். இந்த அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கையன்.
இவர், அலுவலகத்திற்கு வரும் நபர்களிடமும், தொழிலாளர் நல வாரிய சங்க பிரதிநிதிகளிடமும் லஞ்சம் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காத வகையில் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், இது குறித்த புகார், கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்றது. அதன் பேரில், தொழிலாளர் நல வாரிய அலுவலக உதவி ஆய்வாளர் தங்கையனை கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் முடிவு செய்தனர்.
இதனையடுத்து, வெண்ணை மலை பகுதியில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில், டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.40,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் தங்கையனை கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.