இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடக்கவுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அனைத்து அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 8 யில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா, துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா களமிறங்குகின்றனர். இதனிடையே இந்திய அணியின் ‘கிட் ஸ்பான்சர்’ சார்பில், வரும் உலக கோப்பை தொடருக்காக புதிய ‘ஜெர்சி’ நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
இரண்டு தோளிலும் தற்போதுள்ள வெள்ளை நிற கோடுகளுக்குப் பதில், இந்தியாவின் மூவர்ண கொடி போல கோடுகள் இடம் பெற்றுள்ளன. இடது பக்கம் இந்திய கிரிக்கெட் போர்டு ‘லோகோவுடன்’ மேற்பகுதியில் 1983, 2011 – யில் உலகக் கோப்பை 50 ஓவர் வென்றதை குறிக்கும் வகையில் இரு நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்தியா மூன்றாவது முறையாக உலக கோப்பை வெல்ல வேண்டும் என தெரிவிக்கும் வகையில், ‘மூன்றாவது கனவு’ என்ற தலைப்பில் ‘வீடியோ’ வெளியானது. இதில் ‘முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை,’ என துவங்கும் இந்திய பாடகர் ரப்தார் பாடிய, ‘ராப்’ பாடல் இடம் பெற்றுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, பாண்ட்யா, கோஹ்லி, சுப்மன் கில், ஜடேஜா உட்பட இந்திய வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.