எனது அரசியல் கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் சட்டசபையில் 14 சதவீதமும், நாடாளுமன்றத்தில் 15 சதவீதமும் பெண்கள் உள்ளனர். ஆனால், தமிழக சட்டசபையில் 5 அரை சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர்.
இதனால், பெண்களின் நலனை பேணி காக்கும் வகையிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த போராட்டம் காரணமாக பாஜக இதை செய்து காட்டியுள்ளது.
கடந்த காலங்களில் அதாவது 1967 மற்றும் 1976 மக்களவை தேர்தலின் போது அதற்கு முந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படியாக வைத்துத்தான் தொகுதிகள் அதிகரிப்பு செய்யப்பட்டன.
சுமார் 50 ஆண்டுகளாகத் தொகுதி மறு வரையறையே செய்யவில்லை. எனவே, இதை இப்போது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதி மறுவரை செய்யப்பட உள்ளது. இதில் சதி எங்கே இருக்கிறது சதி எப்படி வந்தது.
அதிமுக – பாஜக இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. பிரதமராக மோடிதான் மீண்டும் வரவேண்டும் என்று பாஜக மற்றும் அதிமுக உட்பட அனைவரும் விரும்புகின்றனர்.
எனது அரசியல் கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துக்கு எல்லாம் பதிலடி கொடுத்தால் சரியாக இருக்காது.
அண்ணாதுரை குறித்து நான் கூறிய கருத்து சரியானது. அதற்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. எனது கருத்தில் தான் எப்போதும் பின்வாங்க மாட்டேன். வரலாற்றில் உள்ளதைத்தான் நான் சொன்னேன். அவரைப் பற்றி தவறாகவோ அல்லது தரக்குறைவாகவோ எதுவும் பேசவில்லை.
அதிமுக என்ற கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது.அதுபோல பாஜக என்ற கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது. அவர்கள் அவர்கள் கொள்கையின்படி நடக்கிறார்கள். நாங்கள் எங்கள் கொள்கையின்படி நடக்கிறோம்.
அந்த வகையில் சனாதனம் என்பது என் உயிர் நாடி. அதற்காக அவர்களும் சனாதனம் பற்றிப் பேசவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் முடியாது என்றார்.