இரயில் விபத்துக்களில் சிக்கிப் பாதிக்கப்படுவோர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை 10 மடங்கு உயர்த்திக் கொடுக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுவரை, இரயில் விபத்தில் உயிரிழந்தால் ரூ.50 ஆயிரம், படுகாயமடைந்தால் ரூ.25 ஆயிரம், லேசான காயமடைந்தால் ரூ.5 ஆயிரம் என வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த நிவாரணத்தொகை தொகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 மடங்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
அதன்படி, ரயில் விபத்துக்களில் உயிரிழந்தால் ரூ.5 லட்சம், படுகாயம் அடைந்தால் ரூ.2.5 லட்சம், லேசான காயம் அடைந்தால் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரயில் விபத்துக்களில் சிக்கி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
அதே சமயம் அத்துமீறி நுழைந்து விபத்துக்குள்ளானால், இழப்பீடு அல்லது நிதி உதவி எதுவும் வழங்கப்படமாட்டாது என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.
இரயில்வே வாரியத்தின் இந்த முடிவு, பாதிக்கப்படும் மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்பது பொது மக்களின் கருத்து. அதேவேளையில், இந்த அறிவிப்பு இரயில் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.