சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து ஒன்று தீ பிடித்து எரிந்தது. இதில், பயணம் செய்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூருக்குத் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டுச் சென்றது. பேட்டரியில் இயங்கும் இ -பேருந்து இது. இந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்த பேட்டரி பேருந்து பூந்தமல்லி அடுத்த பாப்பாசத்திரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மின்சார பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், பேருந்தில் உள்ளே இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே குதித்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியை மடக்கி, தீயை அணைக்கும் முயற்சியில் பயணிகள் ஈடுபட்டனர். ஆனாலும், தீ கட்டுக்கடங்காமல் பரவியது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் போராடி தீயைக்கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.