‛‛பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலனுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து புதிடெல்லி உள்ள பா.ஜக, தலைமை அலுவலகத்தில், நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,
நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் பாராட்டுகிறேன். நேற்றும், அதற்கு முந்தைய நாளும், நாம் புதிய வரலாற்றை படைத்துள்ளோம். இந்த சாதனையை படைக்க கோடிக்கணக்கான மக்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்தது பெருமை அளிக்கிறது.
இந்த தருணம் வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ளப்படும். மசோதா பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது பெருமை அளிக்கிறது. ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. பெரும்பான்மை பலத்துடன் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம். இந்தியாவின் எதிர்காலத்திற்கு புதிய சகாப்தம் படைக்கப்பட்டு உள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சாதாரண மசோதா அல்ல. புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக உறுதிப்பாட்டிற்கான அறிவிப்பு. மசோதா நிறைவேற்றப்பட்டது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கு நான் அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றியதற்கான சான்று.
இந்தச் சட்டத்தின் மூலம், ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய கடந்த 3 தசாப்தங்களாக பாஜ., அனைத்து முயற்சிகளை மேற்கொண்டது. இது எங்களது உறுதிமொழி. இன்று அதை நிறைவேற்றி உள்ளது.
சில முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் திறனைக் கொண்டுள்ளன. அத்தகைய ஒரு முடிவுக்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை உடைக்க முயற்சி செய்கிறோம்.
பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, செழிப்பு ஆகியவற்றுக்கான திட்டங்களைக் கொண்டு அவர்களை முன்னேற்ற பா.ஜ.க., அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் மகள்களை கைதூக்கிவிட பணியாற்றி வருகிறோம். பெண்களை கைதூக்கிவிட முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 9 கோடி பெண்கள் பலனடைந்துள்ளனர்.
மக்கள் முழுப் பெரும்பான்மையுடன் நிலையான வலிமையான அரசைத் தேர்வு செய்ததால் தான், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் சாத்தியமானது. நாட்டை முன்னெடுத்துச் செல்ல பெரும்பான்மையுடன் கூடிய உறுதியான அரசு தேவை என்பதை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிரூபிக்கிறது.
யாருடைய அரசியல் சுயநலன்களும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்க விட மாட்டோம். இதற்கு முன்னர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் விவாதத்திற்கு வந்த போது, அதனை நிறைவேற்ற எந்த முயற்சியும் அளிக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்காக நாடு காத்திருந்தது;
அந்த மசோதாவை பார்லியின் இரு அவையிலும் நிறைவேற்றியதன் மூலம் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை செய்து காட்டி விட்டோம், எனத் தெரிவித்தார்.