கேரளாவில் கிறிஸ்துவ பாதிரியாரான மனோஜ் என்பவர், மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாலராமாபுரம் அடுத்துள்ள உச்சக்கடையை சேர்ந்தவர் மனோஜ். இவர் பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2010 -ம் ஆண்டு ஆன்மீக வாழ்வு குறித்து ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தார். இதற்காக, கடந்த 2017 -ம் ஆண்டு ஆங்கிலேயன் திருச்சபையின் சென்னை மறைமாவட்டத்தின் பாதிரியார் ஆனார். கடந்த பல வருடங்களாகக் கிறிஸ்துவ மத கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி வந்தார்.
இந்த நிலையில், ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலை செல்ல மனோஜ் முடிவு செய்தார். இதற்கு, கிறிஸ்துவ அமைப்பின் தலைமையிலிருந்து மனோஜ்-க்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும், மனம் தளராத மனோஜ் தேவாலயத்தின் உரிமையைக் கைவிட்டு சபரிமலை கோவிலுக்குப் புனித யாத்திரை செல்வது என தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு விரதம் இருந்து மாலை அணிந்த மனோஜ், சபரிமலைக்குச் செல்லும் அனுஷ்டானங்கள் அனைத்தையும் முறையாகப் பின்பற்றினார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், பேசிய அவர் கடந்த காலங்களில் பல கிறிஸ்துவ பாதிரியார்கள் சபரிமலை திருக்கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அவர்கள் அனைவர் குறித்தும் எனக்கு நன்கு தெரியும்.
சபரிமலைக்குச் செல்ல வேண்டும் என்பது எனக்கு இது நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது நிறைவேறியுள்ளது என நெகிழ்ந்தார்.