மாதராய் பிறந்திட நல் மாதவம் செய்திடல் வேண்டும்மா என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. பெண் என்பவள் அளவு கடந்து நேசிக்கப்பட வேண்டியவள், அதுமட்டுமல்ல போற்றுதலுக்கும் உரியவளும் கூட.
ஏன், இந்த மனித சமுதாயம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு மிகவும் முக்கிய சக்தியாக இருப்பதே இந்த பெண் சக்திதான். இப்படி எண்ணிலடங்காத பல சிறப்புக்களைக் கொண்டவள் பெண். அப்படிப்பட்ட பெண்ணுக்கு, நிஜ சக்தி கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
பாரதத்தின் பெருமைகளில் ஒன்றாகப் போற்றப்பட உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், மக்களவை, மாநிலங்களவையில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால், பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல பெண் எம்பிக்கள் ஒன்று கூடி, பிரதமருக்கு பூச்செண்டு கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும், இனிப்புகள் வழங்கியும் தங்களது நன்றியை வெளிப்படுத்தினர்.
பெண் சக்தி மத்தியில் உரையாடிய மோடி, பாரதம் ஒரு புதிய சரித்திரம் படைத்துள்ளது. 27 ஆண்டுக் காலம் கிடப்பிலிருந்த மசோதாவை 2 நாளில் நிறைவேற்றியுள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.
தடைகளை உடைத்து நொறுக்கியே இந்த சாதனை படைத்துள்ளோம் என்ற போது, அனைவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.