ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் செல்கிறார்.
இன்று தனது அமெரிக்க பயணத்தைத் தொடங்கும் ஜெய்சங்கர், செப்டம்பர் 26-ந் தேதி 78-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்ற உள்ளார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலான தனது பயணத்தின் போது, ஜெய்சங்கர், ‘உலகளாவிய தெற்குக்கான இந்தியா-ஐ.நா: வளர்ச்சிக்கான டெலிவரிங்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார்.
ஐ.நா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் ஐ.நா பொதுச் சபையின் 78-வது கூட்டத் தொடரின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் ஆகியோரையும் ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளார்.
78-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டம் முடிந்ததும், வாஷிங்டனில் செப்டம்பர் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அமெரிக்காவிலுள்ள முக்கியஸ்தர்கள் உடன் சந்திப்பு மேற்கொள்ள உள்ளார்.
இதில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், வெளியுறவுத்துறை செயலர், அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள், அமெரிக்க வணிகத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடன் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் நடத்த உள்ளார்.
பின்னர், வாழும் கலை (Art of Living) அமைப்பு நடத்தும் 4-வது உலக கலாச்சார விழாவில் ஜெய்சங்கர் உரையாற்றுகிறார்.