தீவிரவாதம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு, தொலைக்காட்சியில் தேவையின்றி முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தீவிரவாதம் உள்ளிட்ட கடும் குற்றங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எந்தவொரு வகையிலும், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று முக்கிய அறிவுரை வழங்கியுள்ளது.
அதாவது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்த ஒருவர், தீவிரவாதம் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளில் சிக்கியவர் வெளிநாட்டில் உள்ள ஒரு தொலைக்காட்சி சேனல் ஒன்றில் சமீபத்தில் நடந்த விவாதத்தின் போது கலந்து கொண்டார்.
அப்போது, பேசிய அவர் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கும் சவால் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்தியாவின் நட்புறவு மற்றும் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்தே, இந்த உத்தரவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசு ஊடக சுதந்திரத்தை மதிக்கிறது. அதே வேளையில், அரசியலமைப்பின் கூறியுள்ளபடி அதன் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் தொலைக்காட்சி சேனல்களால் ஒளிபரப்பப்படும் காட்சிகள் மற்றும் கருத்துக்கள் கேபிள் தொலைக்காட்சி ஒழுங்குமுறை சட்டத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.