இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணியில், இரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இருந்தனர்.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், லபுசேன், ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், சீன் அபோட், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா ஆகியோர் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – மிட்செல் மார்ஸ் களமிறங்கினர். மிட்செல் மார்ஸ் முதல் ஓவரிலேயே முகமது ஷமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் டேவிட் வார்னருடன் ஸ்டீவ் சுமித் ஜோடி சேர்ந்து ஆடினர். இதனைத்தொடர்ந்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 276 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணி 277 ரன்களைக் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஜோடி அதிரடியாக ஆடினர். இருவரும் முறையே, 77 பந்துகளில் 71 ரன்களையும், 63 பந்துகளில் 74 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய கே.எல். ராகுல் நிதானமாக ஆடி 58 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் 281 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 24-ந் தேதி இந்தூரில் 2-வது போட்டியும், 27-ந் தேதி ராஜ்கோட்டில் 3-வது போட்டியும் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.