19 -வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. ஆசிய விளையாட்டு சம்மேளனம் நடத்தும் இந்த போட்டியில் ஆசியக் கண்டத்தில் உள்ள இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் கலந்து கொள்கிறது.
இந்நிலையில், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு விசா வழங்காமல் சீன அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்தியாவின் எதிர்ப்பைக் காட்டும் விதமாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிடுவதற்காகச் சீனா செல்ல இருந்த மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், தன் பயணத்தை ரத்து செய்துள்ளார். இதையடுத்து, சீனாவின் இந்த செயல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டத்தைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது எக்ஸ் பதிவில், “அருணாச்சல பிரதேச தடகள வீரர்களைக் குறிவைத்து, திட்டமிட்டே அவர்களுக்கான அங்கீகாரத்தைச் சீனா மறுத்து உள்ளது. இந்தியக் குடிமக்களைப் பாகுபாட்டுடன் நடத்துவதை ஏற்க முடியாது. எங்கள் நலனைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக அருணாச்சல பிரதேசம் உள்ளது. அப்படி இருக்கையில், சீனாவின் இந்த நடவடிக்கை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிர்வாக விதிகளை மீறுவதுடன், ஒரு நாட்டின் குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் மீது பாரபட்சம் காட்டுவதை வெளிப்படையாக உணர்த்துகிறது.
இந்த நடவடிக்கைக்கு எங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளை பார்வையிடுவதற்காகச் சீனா செல்ல இருந்த மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், தன் பயணத்தை ரத்து செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.