நெல்லையைச் சேர்ந்த ஆசிரியர் ரோகிணி என்பவருக்குப் பணி ஒப்புதல் வழங்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி காட்டியுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஆசிரியர் ரோகிணி. இவருக்குக் கடந்த பல வருடங்களாகப் பணி ஒப்புதல் வழங்கவில்லை. இது தொடர்பாக அவர் துறை அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, பணி ஒப்புதல் வழங்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், கடந்த 3 வருடமாக நீதிமன்றத்திற்கு மேலாக, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த, அபராதத்தை 2 வாரத்தில் வழக்கறிஞர்கள் நலன் நிதியில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வரும் அக்டோபர் 13 -ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், தமிழக அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த 2 வருடங்களாக, நீதி மன்ற உத்தரவுகளை முறையாகப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, தமிழக அரசு தூங்கி வழிவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.