ஊட்டியில் பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் 100 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தூர் அடுத்து அத்திக்குன்னா என்ற தனியார் எஸ்டேட் உள்ளது. இதன் அருகில் மட்டத்துப்பாடி என்ற பகுதி உள்ளது. இங்குக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் 30 அடி பள்ளம் ஏற்பட்டது. இதனால், பள்ளம் ஏற்பட்ட பகுதியைத் தடுப்பு வேலி பேட்டு, யாரும் அருகில் செல்லாத வண்ணம் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் இதே இடத்தில் சுமார் 100 அடிக்குப் பூமி உள்வாங்கியது. இதனால், அருகே குடியிருந்த குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்தனர்.
இது தொடர்பாக, வருவாய்த்துறை, சுரங்கம் மற்றும் புவியியல்துறை, நகராட்சி நிர்வாகம், நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பிரச்சினைக்குரிய பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், பூமி உள்வாங்கிய பகுதியைச் சுற்றியிலும் தடுப்பு வேலி அமைத்து, யாரும் அருகே செல்லாதவாறு தடை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.