மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாக்பூர் விமான நிலையத்தில் இன்று காலை 5.30 மணி வரை 106 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் மழை வெள்ளச் சேதத்தைச் சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பயம் கொள்ளத்தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைந்து முடிக்க நாக்பூர் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை இணைந்து மழைநீர் சூழ்ந்து உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களைப் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால், நகரின் பல சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என நாக்பூர் நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நாக்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக நாக்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.